சீனாவின் வூஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாரணாசியில் கோவிலில் உள்ள சிலைகளுக்கு முகமூடி அணிவித்துள்ளார் கோயில் குருக்கள் ஒருவர்.

உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 47 பேர் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வாரணாசியில் உள்ள கோவில் ஒன்றில் உள்ள சிலைகளுக்கு முகமூடி அணிவித்துள்ளார் கோயில் குருக்கள் ஒருவர்.
இதுகுறித்து பேசியுள்ள கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பண்டே, "கரோனா வைரஸ் நாடு முழுதும் பரவி வருகிறது, எனவே விசுவநாத கடவுள் சிலைக்கும் முகமூடி அணிவித்துள்ளேன். கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக்காகத்தான் இதனைச் செய்துள்ளோம். பக்தர்கள் தெய்வச் சிலைகளைத் தொட வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறோம். சிலைகளைத் தொட்டால் வைரஸ் பரவலாம்" எனத் தெரிவித்தார்.