
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி துரித கதியில் நடைபெற்றுவருகிறது. தினசரி 30 லட்சம் முதல் ஒரு கோடி அளவிலான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதுவரை எந்த நாடும் செய்யாத வகையில் 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கடந்த 17ஆம் தேதி போட்டப்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசி போடுவதில் வேகமாக இருக்கும் இந்தியாவில்தான், தடுப்பூசி போட பயந்து பெரியவர்களே சேட்டை செய்ய ஆரம்பித்துள்ளாகள்.
இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நேற்று (26.09.2021) தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்தக் கிராமத்தில் ஒரு இளைஞரும், அவரது மனைவியும் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர். அதிகாரிகள் தடுப்பூசி போட அந்த இளைஞரை வற்புறுத்திய நிலையில், "பிரதமர் மோடி வந்து தடுப்பூசி போடச் சொன்னால் மட்டுமேதான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்த அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் அவர் விடாப்பிடியாக இருந்ததால், தடுப்பூசி செலுத்தாமலேயே அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.