/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/calcutta-high-court-art_0.jpg)
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபடப்போவதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அறிவித்துள்ளார். நாளை (04.03.2024)தனது கடைசி பணி நாளாக இருக்கும் என நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நாளை மறுநாள் (05.03.2024) அனுப்ப உள்ளதாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று தன்னை பலமுறை திரிணாமுல் காங்கிரஸ் சவாலுக்கு அழைத்துள்ளனர். இந்த சவாலையடுத்து நான் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது என நினைத்ததாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய தெரிவித்துள்ளார்.
நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசியலில் ஈடுபடப்போவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய பரபரப்பு தகவலைத்தெரிவித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)