குஜராத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 93 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். அகமதாபாத், காந்திநகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
குஜராத் பனஸ்கந்தாவில் உள்ள தாண்டா தொகுதியில் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த காந்தி என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் லது பார்கி என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் காந்தி லது பார்கி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், “நேற்று இரவு 9.30 மணியளவில் லது பார்கி மற்றும் அவரது ஆட்கள் தாக்கினார்கள். கொலையும் செய்திருப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க நான் காட்டுக்குள் ஒளிந்திருந்தேன். காட்டுக்குள்ளேயே சுமார் 2 மணி நேரம் ஓடினேன். சுமார் நான்கு மணி நேரம் கழித்து காவல்துறையினர் என்னை கண்டுபிடித்தனர். காரை தடுத்து நகரமுடியாமல் செய்து விட்டதால் சுமார் 10 முதல் 15 கிலோ மீட்டர் ஓடிக் கொண்டே இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.
நேற்று இரவு காந்தி காணாமல் போனதாக முன்னாள் காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், “காங்கிரஸின் தாண்டா சட்டமன்ற வேட்பாளரான காந்தியை காணவில்லை. தேர்தல் கமிஷனிடம் காந்திக்கு கூடுதலாக பாதுகாப்பு கேட்டும் கமிஷன் அதை தாமதப்படுத்தியது. பாஜகவினர் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். இதற்காகவெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். கடுமையாக போராடுவோம்” என பதிவிட்டிருந்தார்.
சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவரே தான் துரத்தப்பட்டதாக புகார் அளித்திருப்பது குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.