இந்தியாவின் இரண்டாவது பெரும் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஹூண்டாயின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் (sales & marketing) இயக்குனரான ராகேஷ் ஸ்ரீவஸ்தவா அந்த நிறுவனத்திலிருந்து பதவிவிலகுவதாக அறிவித்திருக்கிறார். ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனத்திலிருந்து தான் விலக பெரிதாக காரணங்கள் இல்லையென கூறியுள்ள அவர் அங்கு தனது நோட்டிஸ் பீரியடை (Notice Period) முடித்துவிட்டு அடுத்த நிறுவனம் குறித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார். அவர் பி.எம்.டபிள்யு-இந்தியாவில் இணையப் போவதாக தகவல் வந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய அவர் "நான் ஹூண்டாயில் சேர்வதற்கு முன்பு ஆறு நிறுவனங்களின் ஆஃபர் லெட்டர் என்னிடம் இருந்தது. அதே போல் இப்பொழுதும் நான்கு நிறுவனங்களின் ஆஃபர் லெட்டர் இருக்கிறது. ஆனால் நம்மால் எவவ்ளவு முடியுமோ அந்த அளவிற்கு வாய்ப்புகளை தேட வேண்டும். உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. நான் இன்னும் வேறு நிறுவனங்களிலும் எனக்கான, இன்னும் சிறப்பான வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பேன், பின்னர்தான் முடிவு செய்வேன். ஒரு ஆஃபர் லெட்டரோடு திருப்தி அடைந்தெல்லாம் நாம் இருக்கும் வேலையை விடக்கூடாது" என்று கூறியுள்ளார்.
ஒரு வெற்றிகரமான நிர்வாகியாக உயர்ந்த பணிநிலையில் இருக்கும் ராகேஷ் கூறியுள்ளதை தங்களுக்கான அறிவுரையாகக் கருதுகின்றனர் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள்.