நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மனைவியை கணவன் வாளால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ளது சிந்தூர்பங். இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரமேஷ்குமார் (24) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (18) எனும் பெண்ணுடன் ஏற்பட்ட காதலால், சென்ற ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். நான்குமாத மணவாழ்வில் கணவனின் தொந்தரவு தாங்கமுடியாத சங்கீதா, மீண்டும் தாய்வீட்டிற்கே சென்று வசித்துள்ளார்.
இதையடுத்து சங்கீதாவுக்கு அவரது வீட்டார் வேறுவொரு ஆணுடன் திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்நிலையில், சங்கீதாவை தன்னோடு அனுப்பிவைக்க வேண்டும் என்று ரமேஷ்குமார் தொடர்ந்திருந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று சம்பல்பூர் குடும்பவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தது.
அப்போது, நீதிமன்றத்திற்கு சங்கீதா தன் குடும்பத்தினருடன் வந்திருந்த நிலையில், தான் கொண்டிருந்த வாளை எடுத்து சங்கீதாவை ரமேஷ்குமார் சரமரியாக தாக்கியுள்ளார். இதிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்திற்குள் சங்கீதா ஓடியநிலையில், விரட்டி விரட்டி வெறித்தனமாக ரமேஷ்குமார் அவரைத் தாக்கியுள்ளார். இதில் வயிறு, மார்பு, தலை போன்ற இடங்களில் காயம்பட்ட நிலையில் சுருண்டுவிழுந்த சங்கீதா, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் அண்ணன் மகளான இரண்டரை வயது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்தவர்கள் ரமேஷ்குமாரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ரமேஷ்குமாரைக் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.