தனது மனைவியின் காதலை அறிந்த கணவர் அவரை காதலனுக்கே திருமணம் செய்துவைத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோசன்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரும் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால், சாந்திக்கும் சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஒரேயொரு மாதம் மட்டுமே சுஜித்துடன் சேர்ந்து வாழ்ந்த சாந்தி, அதன்பின் தனது சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். தன்னோடு சேர்ந்து வாழ சுஜித் அழைத்தபோது மறுத்த சாந்தி, ஒரு கட்டத்தில் தனக்கும் ரவிக்கும் இடையிலான காதலை சுஜித்திடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனமிறங்கிய சுஜித் ரவி மற்றும் சாந்தியின் காதலை சேர்த்து வைக்க நினைத்துள்ளார். இதில் உறவினர்களின் தடை இருக்கலாம் என எண்ணிய சுஜித், இதுதொடர்பாக காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். காவல்துறையினர் ஒப்புக்கொள்ள, சனிக்வான் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து நேற்று ரவி மற்றும் சாந்திக்கு சுஜித்தே திருமணம் செய்துவைத்துள்ளார்.
சினிமாவில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையும் சினிமாவின் அங்கமே என்பதை இந்த செய்தி உணர்த்தியுள்ளது.