அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஆண்டுதோறும் உலக பட்டினி குறியீட்டு பட்டியலை வெளியிட்டுவருகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டினி குறியீடு தயாரிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 116 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 101வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 107 நாடுகள் இடம்பெற்றிருந்தபோது இந்தியா 94வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் பட்டினி குறியீட்டு பட்டியலில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. பாகிஸ்தான் 92வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் 76வது இடத்திலும் அந்தப் பட்டியலில் உள்ளன.
இந்தியாவில் பட்டினி அளவு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இந்தியாவில் கரோனா மற்றும் அதுதொடர்பான கட்டுப்பாடுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தப் பட்டினி குறியீடு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் அதிகம் பேர் உயரத்திற்கு குறைவான எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.