கடந்த ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அன்று உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை அடுத்த நவ்ரங்காபாத்தில் இந்து மகாசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் காந்தியின் உருவ பொம்மை துப்பாக்கியால் சுடப்பட்டது. இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். காந்தியை அவர் சுடும் போது 'கோட்ஸே வாழ்க' என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வு நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்தும் வகையில் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக இந்து மகாசபையின் பெண் தலைவர் உட்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா ஷகுண் பாண்டேவையும் அவரது கணவர் அசோக் பாண்டேவையும் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.