கேரளாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கேரளாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
கேரளாவில் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மலை பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மண்ணிற்குள் சிக்கியுள்ள 5 குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு ஒரு மணிநேரத்திலேயே 5 செ.மீ. மழை கொட்டியதால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனர்.
பத்தனம்திட்டா, திருச்சூர், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடற்படை ஹெலிகாப்டர்களை கொண்டும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேவைப்பட்டால் உதவுவதற்கு ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் உள்ளதாக கேரள அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார். நிலைமை தற்போது மோசமாக உள்ள போதும் விரைவில் மேம்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பத்தனம்திட்டா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பம்பை நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் நிலையிலும் சபரிமலை கோயிலுக்கு அக்டோபர் 17, 18- ஆம் தேதிகளில் பக்தர்கள் வர வேண்டாம் என கேரள அரசின் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. ஆறுகள் அபாயம் அளவைத் தாண்டி ஓடும் நிலையில், அணைக்கட்டுகளும் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்றும், அதன் பின் அது ஓயும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அம்மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு பற்றிக் கேட்டறிந்தார். கேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று என்று பிரதமர் உறுதியளித்தார்.