தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட மழை வெள்ளம் ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் சூழ்ந்தது. இந்த தரைதளத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த யு.பி.எஸ்.சி மாணவர்கள் மூன்று பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்டித்து மற்ற பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், அந்த பயிற்சி மையத்தில் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர், டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் தங்கிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் 3 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தங்கிருந்த வாடகை அதிகரித்து வந்ததால் பண நெருக்கடியில் தவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி அஞ்சலி தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், ‘அம்மா அப்பாவுக்கு எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நான் உண்மையில் மிகவும் சோர்வாக இருக்கிறேன். இங்கு வெறும் பிரச்சனைகள் தான் இருக்கின்றன. அமைதியே இல்லை. இந்த மனச்சோர்விலிருந்து விடுபட நான் எல்லா வழிகளையும் முயற்சித்தேன். ஆனால் என்னால் அதைக் கடக்க முடியவில்லை. மருத்துவரிடம் ஆலோசனை பெற்றும் எனது மனநலம் மேம்படவில்லை.
தயவுசெய்து அரசுத் தேர்வுகளில் நடக்கும் மோசடிகளைத் தடுத்து வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். பல இளைஞர்கள் வேலைக்காகப் போராடுகிறார்கள். பிஜி மற்றும் ஹாஸ்டல் வாடகையும் குறைக்கப்பட வேண்டும். அவர்கள் மாணவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அனைத்து மாணவர்களாலும் அவ்வளவு தொகையை செலுத்திவிட முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.