கர்நாடகாவில் அதிகப்படியான இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பது அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு அதிகப்படியானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக செய்திகள் உலாவின.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் ராஜாராம் என்பவர் கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதிகப்படியான இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் மரணம் நிகழ்வதாக ஒரு கூற்று இருக்கிறது. இது உண்மையா என அரசு ஆராய வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக அரசு இதுகுறித்து ஆராய சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில் இதய நோய் தொடர்பான நிபுணர்கள் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இளைஞர்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை இந்தக்குழு ஆய்வு செய்து அறிக்கையாக கர்நாடக அரசுக்கு கொடுக்க இருக்கிறது. அதேநேரம் கொரோனா தடுப்பூசிதான் மாரடைப்பு மரணத்திற்கு காரணமா என்பதையும் இந்த ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது.