இந்தியாவில் கரோனா தொற்று மே மாதம் வாக்கில் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்துவருகிறது. அந்த எண்ணிக்கையும் கூட ஒரே சீராக இல்லாமல், மாறுதலுக்குள்ளாகிவருகிறது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. இதுவரை 83 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் இந்த எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒருபுறம் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகள் அமைந்தும் பலர் அதனைப் பயன்படுத்திக்கொள்ளாத நிலையும் இந்தியாவில் தொடர்ந்து இருந்துவருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதில், மருத்தவப் பணியாளர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக வருவதும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என்று அவர்கள் அந்த வீடியோவில் கூறுவதும் பதிவாகியுள்ளது. அவர்கள் அவ்வாறு தொடர்ந்து கூறினாலும், அந்த தெருவில் இருந்த வீட்டிலிருந்து யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.