ஹத்ராஸ் பெண்ணை அவரது குடும்பத்தினரே கௌரவக்கொலை செய்துள்ளதாக வழக்கின் குற்றவாளிகள் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அப்பெண் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு செப்டம்பர் 22 அன்று அப்பெண்ணிற்கு சற்றே நினைவு திரும்பியது.
அப்போது, விசாரணை நடத்திய ஹத்ராஸ் போலீஸாரிடம் அப்பெண், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிற்கு அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், சிறையில் உள்ள கைதி சந்தீப் மற்ற மூவரின் ஒப்புதலோடு ஹத்ராஸ் மாவட்ட எஸ்பிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எங்கள் நால்வர் மீதும் பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். பலியான இப்பெண்ணுடன் எனக்கு இருந்த நட்பின் காரணமாகக் கைப்பேசியிலும் சில சமயம் பேசியுள்ளோம்.
எங்களின் இந்த நட்பில் அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. சம்பவத்தன்று அப்பெண்ணுடன் எனக்கு வயல்வெளியில் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவருடன் இருந்த அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரரின் பேச்சைக் கேட்டு நான் அங்கிருந்து எனது வீடு திரும்பி விட்டேன். வீட்டில் எனது தந்தையுடன் கால்நடைகளைக் குளிப்பாட்டும் பணியில் இருந்தேன். அப்போது, கிராமத்தாரால் எனக்குக் கிடைத்த தகவலின்படி, என்னுடன் இருந்த நட்பைக் கண்டித்து அப்பெண்ணை அவரது தாயும், சகோதரரும் அடித்துப் படுகாயப்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால், அப்பெண் பிறகு பரிதாபமாகப் பலியாகிவிட்டார். ஆனால், நான் அப்பெண்ணுடன் எப்போதும் தவறாக நடந்து கொண்டதில்லை. இவ்வழக்கில் என்னுடன் சேர்த்து மற்ற மூவரையும் அப்பெண்ணின் வீட்டார் பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிட்டனர். நாங்கள் அனைவரும் நிரபராதிகள். இப்பிரச்சனையில் முறையான விசாரணை செய்து எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.