
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 233 இடங்களிலும், மற்ற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி, டெல்லியிலும், பஞ்சாப்பிலும் ஆட்சி நடத்தி வருகிறது. இதனையடுத்து, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 25க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணியில், அரசியல் எதிரியாக இருந்த காங்கிரஸுடன், ஆம் ஆத்மி இணைந்து தேர்தலில் போட்டியிட தயாரானது. ஆனாலும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸுடன் இணைந்ததற்கான தங்களது அதிருப்தியைக் காட்டி வந்தனர். அதன்படி, ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் அக்கட்சியில் வெளியேறினார்.
இதனையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே நடைபெற்ற தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதனிடையே, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான், இந்தியா கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் அம்மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதே வேளையில், மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் கொண்ட டெல்லியில், ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் தேர்தலில் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளிவர ஒரு வார காலம் இருக்கும் நிலையில், காங்கிரஸ் உடனான கூட்டணி தற்காலிக கூட்டணி என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் டெல்லியில் 7 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்தியா கூட்டணிக்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.