![harshvardhan to become chairman of who committee](http://image.nakkheeran.in/cdn/farfuture/CL1hHhZYWnY7ib5m3cRGzcW9LUsaFGMpuiljd2zOyZk/1589955437/sites/default/files/inline-images/gfgf_0.jpg)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 உறுப்பினர்களைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஹிரோகி நகதானி நிர்வாகக்குழுத் தலைவராக இருந்துவந்தார். அவரது பதவிக்காலம் இந்தத் தற்போது முடிவடையும் சூழலில் அப்பதவிக்கு ஹர்ஷ்வர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹர்ஷ்வர்தனை நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கும் ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கொண்ட உலக சுகாதாரச் சபை செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழு, இந்தியாவைச் சேர்ந்தவரே இந்த அமைப்பிற்கு அடுத்த தலைவராக வரவேண்டும் எனக் கடந்த ஆண்டு ஒருமனதாக முடிவெடுத்த நிலையில், தற்போது ஹர்ஷ்வர்தன் அதன்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் இப்பதவியில் நீட்டிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 22 அன்று நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகச் சபைக் கூட்டத்தில் ஹர்ஷ்வர்தன் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.