விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஊர் காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் பலியாகியுள்ளனர்.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது ஊர்வலத்தில் வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இதையடுத்து குழந்தைகள் உள்பட சுமார் 2,500 பேர் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவத்தில் ஊர் காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் காவலர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூஹ், பரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பரிதாபாத் மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று (01.08.2023) செயல்படாது” என தெரிவித்துள்ளார்.