அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதேபோல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் உடன் படிக்கும் சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இரவு நேரத்தில் ஏன் தனியாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதனைத் தட்டிக்கேட்ட மாணவரை அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியதோடு மாணவிக்கு மூன்று பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. மாணவி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்ற பொழுது கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பியுள்ளார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பயந்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்தது குறித்து விவரித்துள்ளார். இதில் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரில் ஒருவர் அதே பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகின்றவர் என்பதும் மற்ற இருவரையும் அவர்தான் அழைத்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.