46- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (31/12/2021) காலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மாநில நிதியமைச்சர்கள் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர். அந்த வகையில், ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5%- லிருந்து 12% ஆக உயர்த்த தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை நிறுத்தி வைத்தது ஜிஎஸ்டி கவுன்சில். மேலும், ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் பற்றி பிப்ரவரியில் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நாளை முதல் அமலாக இருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி உயர்வைத் திரும்பப் பெற ஜவுளி உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.