இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாகப் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் யுபிஐ ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக மக்கள் மத்தியில் தகவல்கள் பரவின. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் இன்று (09.09.2024) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என மக்கள் மத்தியில் தகவல் வெளியாகி இருந்தது.
இருப்பினும் இது குறித்து எந்த ஒரு முடிவையும் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கவில்லை எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது தொடர்பான முடிவை மத்திய அரசு ஒத்திவ்பைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கும் பரிந்துரை தொடர்பாக ஜிஎஸ்டி வரி நிர்ணயக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆன்லைன் கேமிங் மற்றும் நிலை ஆன்லைன் கேமிங்கின் வருவாய் 6 மாதங்களில் ரூ.6909 கோடியாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சிலில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் சற்றும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.