Skip to main content

மம்தா பானர்ஜிக்குப் பெருகும் ஆதரவு; காங்கிரஸை ஓரங்கட்டும் இந்தியா கூட்டணி?

Published on 10/12/2024 | Edited on 10/12/2024
Growing support for Mamata Banerjee for leader of india alliance

எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, விசிக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளோடு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால்,  இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைப் பெற்றது. இதனையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி கட்சிகளிடையே நெருக்கடியை கொடுத்தது. 

இதற்கிடையே, இந்தியா கூட்டணியை தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தது இந்தியா கூட்டணியில் பேசுபொருளாக மாறி வருகிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது, “நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். இப்போது அதை முன்னின்று வழிநடத்துபவர்கள்தான் நிர்வகிக்க வேண்டும். அவர்களால் நிகழ்ச்சியை நடத்த முடியாவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறுவேன். வாய்ப்பு கிடைத்தால் அதன் சீரான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் இந்தியா கூட்டணியை இங்கிருந்து இயக்க முடியும்” என்று பேசினார்.

மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. தற்போது, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்வும், மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “மம்தா பானர்ஜியை நாங்கள் ஆதரிப்போம். அவர் இந்தியா கூட்டணியின் தலைவராக அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். முன்னதாக, லாலு பிரசாத்தின் மகனான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, “மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியை வழிநடத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒருமித்த கருத்து மூலம் முடிவு எட்டப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். 

ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருப்பதாக கருதப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூட, தற்போது இந்தியா கூட்டணியை தலைமை தாங்க மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்துள்ளது. இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “காங்கிரஸ் தலைமையின் கீழ் இந்தியா கூட்டணி தோல்வியடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மம்தா பானர்ஜி தலைவராக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். கூட்டணிக்கு ஒரு தலைவர் தேவை. மம்தா பானர்ஜிக்கு அரசியல் போர்களை நடத்தத் தெரியும். காங்கிரஸ் தனது ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும். மம்தா பானர்ஜி எப்படி அரசியல் செய்கிறார் என்று பாருங்கள்” என்று கூறினார். தற்போது வரை இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு, புதிய தலைமையாக மம்தா பானர்ஜிக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்