சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்றது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது. அதே சமயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான ரூ. 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரைத்தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஜனவரி 13 ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க இருப்பதாகத்தகவல் வெளியாகி இருந்தது. மேலும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனஅனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளனர். அப்போது வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவலியுறுத்த உள்ளனர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளனர். இந்த குழுவில் ஜெயக்குமார், வைகோ, சுப்பராயன், பி.ஆர்.நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.