Skip to main content

குஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமணத்தை ஒத்தி வைத்த மணமகன்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

groom who postponed the wedding to vote gujarat assembly election

 

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறை ஆம் ஆத்மி களத்திற்கு வரவும் மும்முனைப் போட்டியாகத் தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப் பதிவில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 

இதில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. காலையில் 100 வயதுடைய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே போன்று மற்றொரு வாக்குச்சாவடியில் திருமணமான ஜோடி ஒன்று மணக்கோலத்தோடு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

 

இந்த நிலையில் பிரவுல்பாய் மோரே என்ற இளைஞருக்கு மஹாராஷ்ராவில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் நடக்க வேண்டிய திருமணத்தை மாலை நேரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு குஜராத்தில், தபு நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமண உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்து வந்து வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  மறக்காமல் அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்துங்கள் எனக் கூறிவிட்டு திருமணத்திற்காக மகாராஷ்டிரா புறப்பட்டுச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நம்பிக்கை வாக்கெடுப்பு; நிதிஷ்குமார் அரசு வெற்றி!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Nitishkumar government win on vote of confidence

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, பீகார் மாநில சட்டசபையில், முதல்வர் நிதிஷ்குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று (12-02-24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, பா.ஜ.க. 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். 

243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று (12.02.2024) நடைபெற்றது. அதில், பா.ஜ.க - 78, நிதிஷ்குமாரின் ஜே.டி.யூ - 45, ஹெச்.ஏ.எம்.எஸ் - 4 என நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 வாக்குகள் பெறப்பட்டன. மேலும், ஆர்.ஜே.டி -79, காங்கிரஸ் -19, இடதுசாரி - 16 என எதிர்க்கட்சிகளுக்கு 112 வாக்குகள் பெறப்பட்டன. இதன் மூலம், நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

Next Story

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
High Court Madurai Branch Order for case of Voting in college

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கைக்காக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை பயன்படுத்துவார்கள். அதன் அடிப்படையில், மக்களவை தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கைக்காக மதுரை மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் ராஜா முகமது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார். 

அவர் அளித்த மனுவில், ‘மதுரை மருத்துவக் கல்லூரியில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். தேர்தலுக்காக மருத்துவக் கல்லூரியை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், மருத்துவ ஆய்வகங்கள், வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். அதனால், தேர்தல் தொடர்பான பணிகளை வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மனு இன்று (08-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்து வரும் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.