Skip to main content

குஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமணத்தை ஒத்தி வைத்த மணமகன்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

groom who postponed the wedding to vote gujarat assembly election

 

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறை ஆம் ஆத்மி களத்திற்கு வரவும் மும்முனைப் போட்டியாகத் தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப் பதிவில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 

இதில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. காலையில் 100 வயதுடைய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே போன்று மற்றொரு வாக்குச்சாவடியில் திருமணமான ஜோடி ஒன்று மணக்கோலத்தோடு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

 

இந்த நிலையில் பிரவுல்பாய் மோரே என்ற இளைஞருக்கு மஹாராஷ்ராவில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் நடக்க வேண்டிய திருமணத்தை மாலை நேரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு குஜராத்தில், தபு நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமண உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்து வந்து வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  மறக்காமல் அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்துங்கள் எனக் கூறிவிட்டு திருமணத்திற்காக மகாராஷ்டிரா புறப்பட்டுச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Re-polling in Manipur with tight security

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள்  நிகழ்ந்தன. 

Re-polling in Manipur with tight security

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

"வேங்கை வயல் உட்பட எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லை" - திருச்சி ஆட்சியர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Trichy Collector says There is no re-voting in any polling center

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவி பேட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்துவாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார்  வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அடைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வாக்கு சாவடிகயிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது.

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துணை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். திருச்சி மக்களவைத் தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உட்பட, எந்த வாக்கு பதிவு மையத்திலும் மறுவாக்குப் பதிவு இல்லை. திருச்சி மக்களவைத் தொகுதியில், 67.42 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.