மத்தியப்பிரதேச மாநிலத்தில் திருமண நாளன்று மணமகன் மற்றும் மணமகள் இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மணமக்களுக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் திருமண தினத்தன்று மணமகன் விஷம் குடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மணமகளும் விஷம் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மணமகன் உயிரிழந்தார். மணமகள் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்ததில், திருமணம் நடப்பதற்கு முன்பாக கடந்த பல நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகள் மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னுடைய தொழில் காரணமாக திருமணம் இப்போது வேண்டாம் என்று கூறி மணமகன் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளார்.
இதனால் அதிருப்தியான மணமகள் போலீஸ் புகார் தெரிவிக்கவே, மணமகன் உடனடியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் மணமகன் விஷம் குடித்துள்ளார். இதனை மணமகன் மணமகளிடம் கூற, அவரும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரியவந்தது.