Skip to main content

தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு காப்பு... சினிமாவை ஓவர்டேக் செய்த போலீஸ்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை செய்து வருபவர் மோகன கிருஷ்ணா. இவருக்கும் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்தன்று சினிமா பாணியில் தாலி கட்டுவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக கோயிலுக்கு வந்த போலீஸார் மோகன கிருஷ்ணாவிடம் சென்று, உங்கள் மீது புகார் வந்துள்ளது எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும் எதுவாக இருந்தாலும் தாலி கட்டிய பின் நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியுள்ளனர். அதை ஏற்காத போலீஸார், மோகன கிருஷ்ணாவிற்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அதை மறைத்து அவர் தற்போது திருமணம் செய்யப்போவதாக எங்களுக்கு ஆதாரத்துடன் புகார் வந்துள்ளது எனக் கூறி அவரைக் கைது செய்துள்ளனர். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, பெண் வீட்டார் கடைசி நிமிடத்தில் தப்பித்தோம் என அங்கிருந்து கிளம்பியுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘நீங்களெல்லாம் குதிரையில் ஏறவே கூடாது’ - பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
the incident that happened to the listed groom for ride a horse in gujarat

குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சடாசனா பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் சவ்தா. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று (14-02-24) மணமகனின் திருமண ஊர்வலம் நடைபெற்றது. 

அந்த திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மணமகனான விகாஸ் சவ்தாவை மணமகன் கோலத்தில் குதிரையில் ஏற்றி, அவருடைய உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், குதிரையில் அமர்ந்திருந்த விகாஸின் சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தி அவரை தாக்கியுள்ளார். அங்கு வந்த 4 பேரும் விகாஸ் சவ்தாவை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விகாஸ் சவ்தா படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மணமகனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘திருமண ஊர்வலம் நடைபெற்ற போது, குதிரையில் அமர்ந்திருந்த மணமகனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள், ‘எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது’ என்று சொல்லி அவர்கள் மணமகனை தாக்கி காரில் ஏறிச் செல்ல வற்புறுத்தினார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவர்கள் அளிந்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சுமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நான்கு நாட்களில் திருமணம்; திடீரென வந்த செல்போன் அழைப்பு - துக்க வீடாக மாறிய கல்யாண வீடு

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

groom lost their life with four days left for the wedding

 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஐவேலி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 27 வயதான இவர் அதே பகுதியில்  எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், விக்னேஷின் வீட்டில் அவருக்கு சில மாதங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்தபடி சரியான வரன் அமையாமல் இருந்து வந்தது. அதே சமயம், மகனுக்கு வரன் அமையவில்லையே என கவலையோடு இருந்த பெற்றோருக்கு, சேலம் ஏத்தாப்பூரில் பெண் இருப்பதாக உறவினர்கள் மூலம் தகவல் வந்துள்ளது. அதன்பிறகு, விக்னேஷுடன் அவரின் பெற்றோரும் சேர்ந்து பெண் பார்க்க சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண்ணை விக்னேஷிற்கும் அவரின் பெற்றோருக்கும் பிடித்துப்போக, இரு வீட்டிலும் ஜாதகம் பார்த்துள்ளனர். ஜாதகமும் பொருத்தமாக இருந்ததால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து மே 25ஆம் தேதியன்று திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதே நேரம் விக்னேஷும் திருமணப் பெண்ணும் அடிக்கடி செல்போனில் பேசி மகிழ்ந்துள்ளனர். இதற்கிடையில், இருவீட்டு பெரியவர்களும் திருமண வேளையில் பிசியாக இருந்துள்ளனர். இத்தகைய சூழலில், திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், புது பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது. ஒருபுறம் திருமண வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது புதுப்பெண்ணின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் தன்னுடைய பெயர் அஸ்மா என்றும் தான் சங்ககிரியில் குப்தா காலனியில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

 

தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு திருநங்கையாக இருப்பதால் விக்னேஷ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். அப்போது, யாரோ நண்பர்கள் தான் ஃபோன் செய்து விளையாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டு அலட்சியமாக பேசிய புதுப்பெண்ணிடம் அந்த திருநங்கை திடீரென அழ ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மணப்பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. அதன் பிறகு, "இவ்ளோ நாள் பழகியதாக சொல்றிங்களே.. ஒரு போட்டோ கூடவா எடுக்கல” என விபரமாக கேட்க, அழுதுகொண்டே பேசிய அஸ்மா, "ஃபோட்டோதானே வேணும்.. இதோ உன்னோட வாட்ஸப் நம்பருக்கு அனுப்புறேன் பாரு" என கூறிவிட்டு ஃபோனை வைத்துள்ளார்.

 

இந்நிலையில், குழப்பத்தில் இருந்த புதுப்பெண்ணின் செல்போனுக்கு உடனே வாட்ஸப்பில் நிறைய ஃபோட்டோக்கள் வந்துள்ளன. அந்த ஃபோட்டோக்களைப் பார்த்த புதுப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதே சமயம், திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில், தங்கள் மகள் அழுவதைக் கண்ட பெற்றோர், அவரிடம் நடந்த விஷயத்தை கேட்டுள்ளனர். அதன்பிறகு, நடந்த எல்லாவற்றையும் புதுப்பெண் விபரமாகக் கூறி வாட்ஸப்பில் வந்த புகைப்படங்களையும் காட்டியுள்ளார். அதிர்ந்து போன பெற்றோர், புது மாப்பிள்ளை விக்னேஷிற்கு போன் செய்து கடிந்து கொட்டியுள்ளனர். 

 

இதையடுத்து, விக்னேஷ் சில விளக்கங்களைக் கூறியும் சமாதானம் ஆகாத பெண்ணின் பெற்றோர், விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து நடந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கூறியுள்ளனர். மேலும், அங்கிருந்த விக்னேஷையும் அழைத்து விசாரித்துள்ளனர். இதற்கு மேல் பொய் சொல்லவே முடியாது என்பதை புரிந்துகொண்ட விக்னேஷ், பெற்றோரிடமும் பெண்ணின் உறவினரிடமும் மனம் விட்டு பேசியுள்ளார். சங்ககிரி, குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டிருந்த வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் அஸ்மாவிற்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் சில காலம் அவரோடு நெருங்கி பழகியதாகவும் கூறியிருக்கிறார்.

 

மேலும் அவர் ஒரு திருநங்கையாக இருப்பதால் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, அஸ்மாவிடம் விக்னேஷின் பெற்றோர் பேசியிருக்கின்றனர். அப்போது, "நான் விக்னேஷை எனது கணவராக நினைத்து கொண்டுதான் இத்தனை நாட்கள் பழகினேன் என்றும், அவரை என்னால் மறக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, விக்னேஷின் பெற்றோரிடம் பேசும்போது அவரை மாமா, அத்தை என்று உறவு முறையில் அழைத்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயியுள்ளனர். அதே சமயம், இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்களால், விக்னேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். யாரிடமும் பேசாமல் மிகுந்த கவலையில் இருந்த விக்னேஷ் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது அம்மாவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் மணமகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.