சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '''வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உஜ்வாலா என்ற இலவச கேஸ் இணைப்பு திட்டத்தை கொடுக்கும் பொழுது பிரதமர் மோடி சொன்னார் 'எனது தாய் கரி அடுப்பில் ஊதி ஊதி சமைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த புகையை தாய்மார்கள் உள்ளே இழுக்கும்போது ஏறக்குறைய 300 சிகரெட் புகைத்தால் நுரையீரலுக்கு எவ்வளவு கெடுதல் வருமோ அதே கெடுதல் இந்த புகை அடுப்பில் வருகிறது என்பதை கேள்விப்பட்டு தான் இந்த இலவச கேஸ் அடுப்பை கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதேபோல தான் இன்று விலை அதிகமாக இருப்பதால் பல குடும்பங்களுக்கு இது பிரச்சனையாக இருக்கிறது என்பதனால் ஒட்டு மொத்தமாக 100 ரூபாய் குறைந்திருப்பது என்பது உண்மையிலேயே மகளிர் தினத்தில் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பிரதமர் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் நான் நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.