உத்தரப்பிரதேசத்தில் சமூக வலைதளங்களில் அரசுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு மாதம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநில தகவல் தொடர்புதுறையால் உத்தரப்பிரதேச டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்ததிட்டத்தை, மாநிலத்தில் வளர்ச்சி, பொதுநலன், மக்களுக்கானத் திட்டங்கள் அதன் பயன்கள் பற்றிய தகவல்களை டிஜிட்டல் மீடியா தளங்கள் மற்றும் மற்ற சமூக வலைதளங்களின் மூலம் பரப்புவதற்காக உத்தரப்பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், த்ரெட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உத்தரப்பிரதேச அரசுக்கு ஆதரவாகப் பதிவுகள், காணொளி, ரீல்ஸ் உள்ளிட்டவற்றைப் பதிவிடுபவர்களுக்கு அவர்களை பின் தொடருபவர்களுக்கு ஏற்ப 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதே போன்று, யூட்டியூப் காணொளி, ஷார்ட்ஸ் உள்ளிட்டவைகள் பதிவிடும் நபர்களுக்கு அவர்களின் சப்ஸ்க்ரைபர்களின் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், ரூ.7 லட்சம், ரூ,6 லட்சம், ரூ.4 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல், நாட்டின் பிறப்பகுதியில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பர்வகளும் இந்த திட்டத்தின் படி பயனடைய முடியும் என்று கூறியுள்ள உத்தரப்பிரதேச அரசு, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவோ, அரசுக்கு எதிராகவோ, சட்ட விரோதமாகவோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.