ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையைக் குவித்தது மத்திய அரசு. மேலும், ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது மத்திய அரசு. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. சிறப்பு அந்தஸ்திற்கான 370 ஆவது சட்டப்பிரிவு அமலிலிருந்தவரை அம்மாநிலத்தில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மக்களைத் தவிர பிற மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது என்ற சட்டப்பிரிவு இருந்தது. ஆனால் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், அனைத்து மாநில மக்களும் இனி ஜம்மு, காஷ்மீரில் நிலம் வாங்கலாம் எனும் வகையிலான புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. எனினும், விவசாய நிலங்களை விவசாயம் சாராத பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யச் சட்டத்திருத்தங்கள் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.