வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் ஆய்வு செய்தனர். 21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவைச் சந்தித்துப் பேசினர். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். மணிப்பூர் சென்று திரும்பியுள்ள 21 எம்,பி.க்களும் இந்தச் சந்திப்பின் போது உடன் இருந்தனர். குடியரசுத் தலைவர் உடனான இந்தச் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கனிமொழி எம்.பி., தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும், எம்.பி.க்களும் சில தினங்களுக்கு முன் மணிப்பூரில் சென்று அங்கு நிலவரத்தைக் கேட்டறிந்து, அதன்பின்பு குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தோம். அவரிடம் நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், 90 நாட்களைக் கடந்தும் மணிப்பூரில் இன்னும் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை. பல பேர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய வாழ்வாதாரம் முழுவதுமாக பறிக்கப்பட்டிருக்கின்றன.
60,000க்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வீடுகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெண்கள் மீது வன்முறை நடந்திருக்கிறது. அதைத் தாண்டி, இன்றைக்கும் பல பேர் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கக்கூடிய சூழலில் கூட மணிப்பூர் அரசாங்கம் அவர்களுக்கு எந்தவித அடிப்படைத் தேவைகளையும் செய்யவில்லை. அவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இன்னும், அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழலில், இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட முடியாது என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
நாடாளுமன்றத்தில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். பிரதமர் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லியும், அரசாங்கம் அதற்கு முன்வராத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று குடியரசுத் தலைவரிடம் எடுத்து வைத்திருக்கிறோம். இன்னும் மணிப்பூரில் உள்ள மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அரசாங்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் அவரிடம் எடுத்துரைத்தோம்.
முக்கியமாக, மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். பாராளுமன்றத்தில், அனைவரின் கருத்துகளையும் கேட்டு ஒன்றிய அரசு அதற்கு ஒரு நல்ல தீர்வை உருவாக்க வேண்டும். மக்கள் மறுபடியும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. நாங்கள் வைத்த அந்தக் கோரிக்கையை குடியரசுத் தலைவர் வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்பதற்கு தான் இந்தச் சந்திப்பு நடந்தது. எங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். குடியரசுத் தலைவருடைய கடமை இதை வலியுறுத்திச் சொல்வது.
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி இது குறித்து பேசுவார் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோமோ, அதே நம்பிக்கையில் தான் குடியரசுத் தலைவரையும் சந்தித்திருக்கிறோம். ஏனென்றால், அந்த வீடியோவில் இருந்த இரண்டு பெண்களை நாங்கள் சந்திக்கும்போது அவர்கள் கேட்கக்கூடிய நியாமான கோரிக்கை என்னவென்றால், எங்களை அந்த வன்முறை கும்பலில் விட்டுச்சென்ற காவல்துறையினரை இதுவரை சஸ்பெண்ட் செய்து கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு சூழல் இருக்கும் போது எந்த நம்பிக்கையில் மக்கள் அங்கு வாழ முடியும். அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கலவரத்திற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு அந்த மாநிலத்தின் முதல்வர் பதவி விலக வேண்டும். இது எங்களுடைய கோரிக்கை மட்டுமல்ல அங்கு இருக்கக்கூடிய மக்களின் கோரிக்கையும் இதுதான்” என்று பேசினார்.