இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கும் குட்பை (Good Bye). பொதுமக்களை ஏமாற்றும் போலியானவர்களுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தியா கூட்டணி வாக்குகளைத் தட்டி பெறுகிறது. பாஜகவிடம் இருந்து நாடு விரைவில் விடுதலை பெறும் நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் விரைவில் வரப்போகிறது”எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், “நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பை ஒழிப்பதும், தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து அவர்களின் உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடுகளைப் பறிப்பதும்தான். ஒருபுறம் கண்மூடித்தனமான தனியார்மயமாக்கலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி அரசு வேலைகள் அகற்றப்படுகின்றன. இது பின்கதவு வழியாக இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியாகும்.
மறுபுறம் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைப் பொது வகுப்பினர், கொடூரமான கொடுமைகளை எதிர்கொண்டு நீதிக்காக ஏங்க வைக்கும் அமைப்பு உருவாக்கப்படுகிறது. எனவே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் இந்தியக் கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும். அரசியலமைப்பு - ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் சுயமரியாதையின் பாதுகாவலர், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.