மத்தியப் பிரதேச மாநிலத்தில் 300 அடி உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து சிக்கிக் கொள்வதும், அதில் சிலர் காப்பாற்ற முடியாமல் இறப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஆழ்துளைக் கிணறு தொடர்பாக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியும் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம், சிகோரி மாவட்டத்தில் உள்ள மொங்ஹலி கிராமத்தில் 3 வயது சிறுமி தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் மீட்புப் படைக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர்.
ராட்சச இயந்திரம் மூலமாக 300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் உள்ள பகுதியைத் தோண்டும் பணியை மேற்கொள்ளும் போது அந்த சிறுமி 30 அடி ஆழத்தில் சிக்கிருப்பது தெரிய வந்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுமியைப் பாதுகாப்பதற்காக மருத்துக் குழுவினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சிறுமிக்குக் குழாய் ஆக்ஸிஜன் கொடுத்து வருகின்றனர்.
மீட்புப் படையினர் சிறுமியை மீட்கக் கடுமையாகப் போராடி வந்தாலும், அந்த ஆழ்துளைக் கிணற்றில் 20 அடிக்குக் கீழ் முழுவதும் பாறைகளாக உள்ளதால் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.