Skip to main content

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Gas cylinder price reduced by Rs.500 in Puducherry

 

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

 

அதன்படி ரக்‌ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சகோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என தெரிவித்திருந்தார்.

 

மேலும் இந்த விலை குறைப்பு வர்த்தக ரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (30.08.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாடு முழுவதும் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

 

Gas cylinder price reduced by Rs.500 in Puducherry

 

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மேலும் குறைத்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பினபடி புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 300 ரூபாயும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 150 ரூபாயும் மாநில அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் விலை குறைப்புடன் சேர்த்து மொத்தமாக சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 500 ரூபாயும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 350 ரூபாய் குறைய உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்