Skip to main content

தொழுகையின் போது அனுமன் பாடல்; கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The gang incident happened the shopkeeper for Hanuman song during prayer

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் (40). இவர் நகரத்பேட்டை பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே மசூதி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி மாலை, மசூதியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். அப்போது, முகேஷ் குமார் தனது கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளார். அதிக சத்தத்துடன் அவர் பாடல்களை ஒலிக்கச் செய்ததால், தொழுகையில் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் 5 பேர் கொண்ட இளைஞர்கள், முகேஷ் குமார் கடைக்கு வந்து, பாடல்களின் சத்தத்தை குறைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால், முகேஷ் குமார் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில், அந்த இளைஞர்கள், முகேஷ் குமாரை சரமாரியாகத் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து முகேஷ் குமார், ஹல்சூர் கேட் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், சுலைமான் (28), ஷாநவாஸ் (29), ரோஹித் (25) உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் புகுந்து 5 பேர் கொண்ட இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்