விமான எரிபொருளுக்கான பணம் வழங்கப்படாததால் நாடு முழுவதும் 6 விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு இனி எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என இந்தியன் ஆயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் எரிபொருள் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
![Fuel supply to Air India stopped at 6 airports](http://image.nakkheeran.in/cdn/farfuture/AEo8Ve8iJwLZ1HCmCKug5FmhK6xpS7hkyIoWZWP-W0A/1566627696/sites/default/files/inline-images/air-india-story-std.jpg)
இந்தியன் ஆயில் தலைமையிலான எரிபொருள் விற்பனை கூட்டமைப்பு, ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டிணம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் இருந்து செயல்படும் ஏர் இந்தியா விமானகளுக்கு ஜெட் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
எரிபொருள் விற்பனை கூட்டமைப்புடன் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஏர் இந்தியா ஏற்கனவே இதற்காக ரூ.60 கோடியை மொத்த தொகையாக செலுத்தியுள்ளதாகவும் விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசியுள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "சரியான ஆதரவு இல்லாத நிலையில் ஏர் இந்தியாவால் மட்டும் இப்படி மிகப்பெரிய கடன்களை கையாள முடியாது. இருப்பினும் ஏர் இந்தியா இப்போது வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. லாபங்களும் வர ஆரம்பித்துள்ளது" என கூறினார்.