பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அந்தந்த மாநிலக் கட்சிகளும், தேசிய கட்சிகளும் முழு அளவில் தயாராகி வருகின்றன.
இந்தச்சூழலில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் கோவா மாநிலத்திற்கு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்தநிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கோவா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குப் பேசிய அவர் கிறிஸ்துவர்களுக்கு வேளாங்கண்ணி செல்ல இலவச யாத்திரையை ஏற்பாடு செய்வோம் எனக் கூறியுள்ளார்.
கோவாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஊழல் கட்சிகள். அதனால்தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுவதற்கு காங்கிரஸ் துணிவதில்லை. எதிர்த்துப் பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அல்லது அமைச்சர் மீது ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை?
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றன. அவர்கள் ஆட்சிக்கு வரும்போது மற்றொருவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கோவாவில் நாங்கள் ஆட்சி அமைத்தால், இந்துக்களுக்கு அயோத்திக்கும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணிக்கும் இலவச புனித பயணத்தை ஏற்பாடு செய்வோம். முஸ்லீம்களுக்கு, அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களுக்கு ஷீரடி கோயிலுக்கும் இலவச பயணத்தை ஏற்பாடு செய்வோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.