ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங், பஹதுர்கர் என்ற இடத்தில் காரில் பயணித்த போது அங்கிருந்த மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜஜ்ஜார் மாவட்ட எஸ்.பி. அர்பித் ஜெயின் கூறுகையில், “இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சி.ஐ.ஏ. மற்றும் எஸ்.டி.எஃப். குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். மேலும், இது பற்றி ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எஸ்.டி.எஃப். விசாரணையில் இறங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
பிரம்மா சக்தி சஞ்சீவனி மருத்துவமனை மருத்துவர் மணீஷ் ஷர்மா கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் சுடப்பட்ட நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. நஃபே சிங் மற்றும் மற்றொரு நபர் ஜெய்கிஷன் ஆகிய இருவரும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இருந்தனர். நாங்கள் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தோம். இருப்பினும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தோள்பட்டை, தொடை மற்றும் மார்பின் இடது பக்கம் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மேலும் இருவர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ஹரியானா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா கூறுகையில், “ஹரியானாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ஜஜ்ஜரில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. . ஹரியானாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் சாலைகளில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இங்கு அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமா அல்லது முதல்வர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.