Skip to main content

மீண்டும் கட்சி தொடங்கினார் முன்னாள் அமைச்சர் கண்ணன்! 

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் காங்கிரஸில் இருந்து விலகி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார். அதன் பிறகு 2016- ஆம் ஆண்டு தேர்தலின் போது அ.தி.மு.கவுக்கு சென்றார். ஜெயலலிதா இறந்த பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.
 

இன்று (25/09/2019) மதியம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் 'மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி' என்ற புதிய கட்சியை துவக்கி இருப்பதாக கட்சியின் பெயர் பலகையைத் திறந்து வைத்தார். அப்போது தனது ஆதரவாளர்களிடையே  பேசிய  அவர், "மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை துவக்கி உள்ளேன். அதிகாரப்பூர்வமாக இந்த கட்சி செயல்படும். நடைபெற உள்ள காமராஜர் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சி போட்டியிடும். தற்போது பதவி ஆசை ஏற்பட்டு மீண்டும் கட்சி துவங்கியதாக சிலர் நினைக்கிறார்கள்.  
 

உச்சாணிக்கொம்பில் இருந்தபோதே நான் பதவியை துறந்தவன். 1965- இல் காமராஜரை சந்தித்த போது காங்கிரஸில் இணைத்து கொண்டேன். காமராஜரை உதாரணமாக வைத்து அரசியல் செய்து வருகின்றேன். புதுச்சேரியில் உள்ள அரசை தூக்கி எறிய வேண்டும். அரிசி போடவில்லை, வேலை வாய்ப்பு இல்லை, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்றார்கள் தெருவுக்கு 5 பேர்க்கு கூட வேலை கொடுக்கவில்லை. நான் ஆட்சியில் இருந்தபோது 25,000 பேர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன். மூடி கிடைக்கின்ற தொழிற்சாலைகளை திறந்து வைப்பேன்.  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்"  என்றார். 

 Former Minister Kannan once again launched the party

பின்னரே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் , " புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டு உள்ளது.  புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. புதுச்சேரியில் நில அபகரிப்பு தற்போது தலைவிரித்தாடும் நிலையில் உள்ளது. இந்த ஆட்சி திட்டமிடத்தெரியாத ஆட்சியாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் சரியாக செயல்படவில்லை. இந்த காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓயமாட்டேன். 


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பிறகு அறிவிப்போம். தற்போது என்னிடம் சில கட்சிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசினார்கள். நான் காமராஜர் காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். காங்கிரஸ் மேலிடம் என் வீட்டில் வந்து கேட்டார்கள். தற்போது அதிகாரத்தின்  பண பலத்தால் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடும் நிலையில், நாங்கள் எதிர்த்து நிற்போம். 


நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வியாபாரம் பெருகும். ஸ்பின்னிங் மில்கள், ஏ.எப்.டி.மில், பாரதி மில் என அனைத்து மில்களையும் திறப்போம். ஆட்சிக்கு வந்தால் முதியோர் தொகை வழங்குவேன். நரேந்திரமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினேன். அதேசமயம்  நரேந்திரமோடி  தவறு செய்தால் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவேன்" என்று கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்