Skip to main content

போக்சோ வழக்கு; எடியூரப்பாவிடம் விசாரணை!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Karnataka CM BS Yediyurappa POCSO case

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இது குறித்தும் சதாசிவ நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Former Karnataka CM BS Yediyurappa POCSO case

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்?. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்?. உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால் ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி, எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அதிகாரிகள் முன்பு இன்று (17.06.2024) காலை 10:50 மணிக்கு ஆஜரானர். இதனையடுத்து எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்