இந்தியாவில் மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இன்று (10.08.2021) காலை 8 மணிவரை 51 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 562 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் உள்ள வெளிநாட்டவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள வெளிநாட்டவர்கள், தங்களது பாஸ்போர்ட் மூலம் கோவின் செயலியில் பதிவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
"இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம். பெருநகரங்களில், அதிக மக்கள் தொகை அடர்த்தியால் கரோனா பரவலுக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்குத் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியம்" என வெளிநாட்டவருக்குத் தடுப்பூசி செலுத்தும் முடிவு குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.