மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (23.08.2021) தேசிய பணமாக்கல் (national monetisation pipeline) திட்டத்தை முறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றைக் குத்தகைக்கு விடுவதும் அடங்கும்.
அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம், நெடுஞ்சாலைத்துறையிலிருந்து 1.6 லட்சம் கோடியையும், ரயில்வே துறையிலிருந்து 1.5 லட்சம் கோடியையும், மின் துறையிலிருந்து 79,000 கோடியையும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விமான நிலையங்களிலிருந்து 20,800 கோடியையும், துறைமுகங்களில் இருந்து 13,000 கோடியையும், தொலைத்தொடர்பு துறையிலிருந்து 35,000 கோடியையும், ஸ்டேடியங்களில் இருந்து 11,500 கோடியையும், மின்சக்தி பரிமாற்றத் துறைகளிலிருந்து 45,200 கோடியையும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விட்டு திரட்டப்படும் 6 லட்சம் கோடியை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.