இந்தியாவின் பிரபலப் பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ திட்டத்திற்குத் தலைமை வகித்தவர். மேலும் கொச்சி, லக்னோ ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மெட்ரோவிற்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். இவ்வாறு மெட்ரோ திட்டங்களில் திறம்படச் செயலாற்றியதால், இவர் ‘மெட்ரோ மனிதன்’ என அழைக்கப்படுகிறார்.
இவர், கடந்த மாதம் 25 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைவதற்கு முன்பே, இந்தாண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவார் எனத் தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், வரும் தேர்தலில் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் என அறிவித்தார். மேலும் மத்திய இணை அமைச்சர் முரளிதரனும் இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
ஆனால், சற்று நேரத்திலேயே பாஜக, முதல்வர் விவகாரத்தில் பல்டி அடித்தது. நேற்று இரவே மத்திய இணை அமைச்சர் முரளிதரன், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் என ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்துவிட்டு அவ்வாறு சொன்னதாகக் கூறினார். மேலும், மாநில பாஜக தலைவருடன் பேசியபோது, தான் அவ்வாறு ஏதும் அறிவிக்கவில்லை, கேரள பிரச்சனைகள் குறித்துத்தான் பேசினேன் என என்னிடம் தெரிவித்தார். எனவே, மாநிலத் தலைவர் கூறியதை அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என முரளிதரன் விளக்கமளித்தார்.
இந்தநிலையில், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், "பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை. அதனைக் கட்சியின் மத்திய தலைமைதான் அறிவிக்க வேண்டும். மக்களும் கட்சியும் ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்க விரும்புகிறது என்றுதான் நேற்று நான் கூறினேன். நான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" எனத் தெரிவித்துள்ளார். வருகின்ற வாரம் நடைபெறும் நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு, கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.