மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியில் மீட்புப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என பலரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடலோர பகுதியில் இருக்கக்கூடிய மீனவர்களும் தங்களின் சொந்த படகுகள் மூலம் வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்ற செய்தி பரவிய பின்னர் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டுவந்த அத்தியாவசிய பொருட்கள் வெள்ள பாதிப்பான இடங்களுக்கு அருகில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. பேரிடர் மீட்புக்குழு, ராணுவ வீர்கள் என தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகளில் மீனவர்களும் கரம் கோர்த்துள்ளனர். கடலோர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தங்களின் சொந்த போட்டுகள் மூலம் மீனவர்கள் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரள அரசானது மக்களை தொடர்ந்தும் மீட்டு வரும் படகுகளுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் அதேபோல படகுகளுக்கு ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை அரசு சரி செய்து கொடுக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்றுமட்டும் கேரளாவில் அதிகப்படியாக ஒரே நாளில் 2 லட்சம் பேர் மீட்கப்பட்டனர் அதிலும் முக்கியமாக மீனவர்கள் மட்டும் தனியாக கிட்டத்தட்ட ஒருலட்சம் பேரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது