Published on 07/08/2021 | Edited on 07/08/2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதலில் மீராபாய் சானுவும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான குத்துச்சண்டையில் லோவ்லினாவும், பேட்மிண்டனில் சிந்துவும் வெண்கலப் புத்தகத்தை வென்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலத்தை வென்றுள்ளது.
இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான 65 கிலோ மல்யுத்த போட்டியில், இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பேகோவும் மோதினர். இதில் பஜ்ரங் புனியா 8-0 என தவுலத் நியாஸ்பேகோவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இது டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியா வென்றுள்ள ஆறாவது பதக்கமாகும். இதுவரை இந்த ஒலிம்பிக்சில் இந்தியா இரண்டு வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கலங்களையும் வென்றிருந்தது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்த நீரஜ் சோப்ரா, 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில் சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ள நிலையில், இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 66 வது இடத்தில் இருந்து 47 ஆவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்துள்ளது.