பா.ஜ.கவின் தற்போது எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) பெண் கான்ஸ்டபிள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத்தை அந்தப் பெண் கான்ஸ்டபிள் சரமாரியாக கன்னத்தில் தாக்கினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த மூத்த சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய விவசாயிகளுக்கு எதிராக கங்கனா ரனாவத் பேசியிருந்ததால், பெண் காவலர் அவரை அறைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன் ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் அது குறித்து கவலை கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பெண் காவலர் தன்னை அறைந்தது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் கங்கனா ரனாவத் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுரை தொழில் பாதுகாப்புப்படை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு எதிராக சிஐஎஸ்எப் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கங்கனா ரனாவத்தை தாக்கியது குறித்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் விமான நிலையத்தில் இருந்து பேசினார். இது தொடர்பான வீடியோவில் அவர் பேசியதாவது, ‘100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் உட்கார்ந்து இருக்காங்க என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தார். அவரால், அங்கே சென்று அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா?. கங்கனா இந்தக் கருத்தை சொல்லும் போது, அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினார்’ என்று ஆவேசமாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் போட்டியிட்டார். இதில் இவர் 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.