கத்தியுடன் வந்த முகமூடி கொள்ளையனை, கத்திரிக்கோலை வைத்து மடக்கிய பெண் வங்கி மேலாளரின் சிசிடிவி காட்சிகள், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில், மருதரா கிராமின் என்று பெயரிடப்பட்டுள்ள தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று வாடிக்கையாளர்கள் அதிகம் இல்லாத நேரம் பார்த்து முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் வங்கிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளான். கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்த கொள்ளையன் அங்கிருந்தவர்களைத் தாக்க முயற்சித்ததுடன் பணத்தை எடுத்துத் தருமாறும் மிரட்டியுள்ளான். அதில், சில வங்கி ஊழியர்களின் செல்போன்களையும் பறித்துள்ளான்.
இதனால் வங்கியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. வெளியில் என்ன சத்தம் கேட்கிறது என்று கேட்டு வங்கி மேலாளர் பூனம் குப்தா, அவரது அறையில் இருந்து வெளியில் வந்தார். அப்போது, கொள்ளையனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூனம் குப்தா, டேபிள் மேல் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அந்த கொள்ளையனை எதிர்த்துப் போராடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் அந்த பூனம் குப்தாவை கத்தியால் குத்த முயற்சித்தார்.
இருப்பினும் பூனம் குப்தா தொடர்ந்து அந்தக் கொள்ளையனிடம் வாக்குவாதம் செய்தார். அவரின் இந்த துணிச்சலால் தைரியமடைந்த மற்ற ஊழியர்கள், கொள்ளையனை விரட்டி பிடித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்து, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கைது செய்யப்பட்டவர் 29 வயதான லாவிஷ் என தெரிய வந்துள்ளது.
லாவிஷ் வங்கியில் புகுந்த நேரத்தில் லாக்கரில் மட்டும் 30 லட்சம் ரொக்கமாய் இருந்தது. பெண் மேலாளர் திருடனை எதிர்த்துப் போராடியதால்தான் வங்கியில் இருந்த ரூ.30 லட்சம் காப்பாற்றப்பட்டது என பூனம் குப்தாவை அங்கிருந்த வங்கி ஊழியர்கள் பாராட்டியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.