டெல்லியைச் சேர்ந்த கணேஷ், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அடிக்கடி வந்து பொருள் வாங்கிய புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவித்ராவை கணேஷ் திருமணம் செய்து கொண்டார். தற்போது பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு உதவி செய்ய வேறு யாரும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் தற்போது ஏழ்மை நிலையில் இவர்கள் இருந்து வருகின்றனர்.
இதனை அறிந்த கடற்கரையில் வியாபாரம் செய்யும் சக வியாபாரிகள், கணேசுக்கும் பவித்ராவுக்கும் வளைகாப்பு செய்ய முடிவு செய்து அந்த வளைகாப்பை கடலோர சாலையில் சிறப்பாக நடத்தினார்கள். மேலும் வளைகாப்பின் போது ஒரு பெண்ணிற்கு தாய் வீட்டிலிருந்து என்னென்ன சீதனங்கள் செய்வார்களோ அந்த சீதனங்களான பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் லெமன் சாதம், தயிர் சாதம், புளி சாதம் என 9 வகையான சாதங்களுடன் பவித்ராவுக்கு வளைகாப்பை சக வியாபாரிகள் செய்து வைத்தனர்.
மேலும் வளைகாப்பின் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது. ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சாலையோரம் வியாபாரம் செய்யும் நிறைமாத கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.