"இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்"என மத்திய, மாநில அரசுகளை ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்ப்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜி.எஸ்.டி முறைகளில் உள்ள குழப்பங்கள் தொடர்பாகத் தீர்வு காண வேண்டும் எனக்கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "ஜி.எஸ்.டி கவுன்சிலின் பணி என்பது பரிந்துரைகளை வழங்குவதே தவிர, அரசுகளைக் கட்டுப்படுத்துவது அல்ல" என்று தீர்ப்பு வழங்கியது.
குஜராத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்தியாவில் ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. இந்தியா கூட்டாட்சித் தத்துவ நாடு என்பதால் ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு உண்டு. ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுரைகள், பரிந்துரைகளை வழங்கலாம்.
ஆனால், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது. ஜி.எஸ்.டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்குச் சம உரிமை உண்டு. ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால், அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதிக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி கவுன்சிலின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்த தீர்ப்பு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.