மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடு முழுவதிலிருந்தும் டெல்லியில் தொடர் போராட்டத்தை நடத்தினர். ஒரு வருடமாக நடந்த இந்தப் போராட்டம் தொடர்பாகவும், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், போராட்ட அமைப்பினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. விவசாயிகள் முழுமையாக அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறவேண்டும் என உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், விவசாயிகளின் இந்தத் தொடர் போராட்டம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தக் கோரி ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய ஒருவருட போராட்டத்தில், அந்நிய நாட்டின் சதி, அந்நிய நாட்டு பணம் செலவிடப்பட்டிருக்கலாம் இதன் காரணமாகவே இவ்வளவு பெரிய அளவில் விவசாயிகளின் போராட்டம் நடந்திருக்கும் என சந்தேகம் உள்ளது. எனவே என்.ஐ.ஏ. விசாரணை தேவை என ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தினேஷ் மகேஷ்வரி அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, “நீதிமன்றச் செயல்பாடுகளை கொச்சைப்படுத்தாதீர்கள், ஏற்கனவே நடந்து முடிந்த இந்த விவகாரத்தில், இப்படியான மனுவைத் தாக்கல் செய்ய என்ன அவசியம்” உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தார்.