Skip to main content

30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்; 80 வயது மூதாட்டியாக திரும்பி வந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
Family rescues 80-year-old woman who went missing 30 years ago in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போன பெண், 80 வயதில் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணின் 13 வயது மகன் புளிய மரத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்துள்ளார். மகன் இறந்த துக்கத்தில் மூழ்கிய அந்த பெண், மன உளைச்சலால் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த பெண்ணின் குடும்பத்தினர், காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அந்த பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், எந்தவித தகவலும் கிடைக்காததால், அந்த வழக்கு அப்படியே கிடப்பில் இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், அந்த பெண் நாசிக்கிற்கு சென்று, பஞ்சவடி பகுதியில் பல ஆண்டுகளாக சாலையில் அலைந்து திரிந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாலையில் உடல் மற்றும் மனநிலை மோசமடைந்து அந்த பெண் அலைந்து திரிந்துள்ளார். இதனை கண்ட நாசிக் போலீசார், அவரை மீட்டு தானே மனநல மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அளித்த சிகிச்சையில், அவருக்கு ஞாபக மறதி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

மருத்துவமனையில், அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கொஞ்ச கொஞ்சமாக அவருக்கு பழைய ஞாபகத்தை வரவழைத்தனர். அந்த சிகிச்சையில், கடந்த கால நினைவுகளை துண்டு துண்டாக அந்த பெண் கூறியுள்ளார். அதை வைத்து மருத்துவமனை ஊழியர்கள், படிப்படியாக அவரது சொந்த ஊரைக் கண்டுபிடித்தனர். அதன்படி, அகமதுநகரில் உள்ள காவல்துறையை தொடர்பு கொண்டு, நடந்த விவரத்தை கூறினர். காவல்துறை மூலம் தகவல் கிடைத்ததும், அந்த பெண்ணின் மருமகள், மருமகன்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 17ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அந்த பெண்ணை சந்தித்து மீட்டு தங்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்